|
மாகா தமிழ்ச் சங்கம் நவம்பர் 21, 2009 நிகழ்ச்சித் தொகுப்பு: சௌந்தர் பாகம்-1
நவம்பர் மாதமென்றால் இலையுதிர்ந்த மரங்களே கண்முன்னே நிற்பனவாம். ஆனால் இந்த நவம்பரில் ஒரு மாற்றம். வேனிற் காலம் முழுதும் சலனமின்றி இருந்த மாகா தமிழ்ச் சங்கம் புதிய மொட்டுக்களுடன் மீண்டும் துளிர்த்து எழுந்தது. இதற்கு மேலும் அழகூட்டும் வகையில் அதன் கிளைகளில் இரண்டு மணிகள்! ஒன்று கலைமணி, மற்றது கதைமணி.
ஆம்! தமிழகம் உலகிற்குத் தந்த இந்த இருமணிகளை நமக்கு அறிமுகம் செய்ய இவர்களின் படைப்புக்களை நன்கறிந்தவர்களும் நேரில் கண்டு அவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிய குடும்பத்தினரும் நண்பர்களும் நமக்காக அமைத்துக் கொடுத்த அரங்கந்தான் இது.
அந்த இரு மணிகள் யாவர்?
கலைமணி- கொத்தமங்கலம் சுப்பு கதைமணி-சுஜாதா (ரங்கராஜன்)
இன்றைய கூட்டம் வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் திரு. ரகுராமன் அவையோருக்கு வாழ்த்தும் வரவேற்பும் கூறி, பேச இருக்கும் பெரியோர்களை அறிமுகம் செய்தார். கலைமணியின் நூற்றாண்டு 2010-ல் வரவிருக்கிறது. இதைத் தமிழ் மக்கள் பல்வேறு இடங்களில் சிறப்பாகக் கொண்டாட உள்ளனர். இருப்பினும், மாகா தமிழ்ச் சங்கம் இவற்றிக்கெல்லாம் முன்னோடியாக இந்த வருடமே கலைமணிக்கு விழாவெடுக்கும் வகையாக இந்த கூட்டத்தை நடத்த முன்வந்திருப்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். இங்கு பேச இருப்பவர்கள் இம்மணிகளைப் பற்றி எங்கோ படித்துவிட்டு நமக்குக் கதை சொல்பவரல்லர். கலைமணியுடன் மிக அணுக்கமாக இருந்த அன்னாரின் மகளார் திருமதி அலமேலு மணி அவர்கள் தமது இனிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். மற்றும், கதைமணி சுஜாதாவுடன் சிறிய வயதிலிருந்தே பழகிய திரு. ரகுராமன் அவர்களும், சுஜாதவை நன்கறிந்த திரு. வெங்கட்டும் இங்கே சொல்ல இருக்கும் தத்தம் அனுபவங்கள் அவர்கள் நேரில் கண்டவை, கேட்டவை.
கலைமணி பற்றிப் பேச வந்தவர்கள்: பேரா பசுபதி -ரசிகர் என்ற பார்வையில்; திருமதி. அலமேலு மணி-அன்பு மகள் என்ற அணுக்கத்தில் கதைமணி பற்றிப் பேச வந்தவர்கள்: திரு. ரகுராமன்-ரசிகர்/உறவினர் என்ற பார்வையில்; திரு.வெங்கட்-விமர்சகர்/நண்பர் என்ற கண்ணோட்டத்தில்
முதலில் கலைமணி: கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பன்முகங்கள்
பேரா.பசுபதி:
8 அக்டோபர் 1910 அன்று கன்னாரியேந்தல் என்ற சிற்றூரில் பிறந்த சுப்பிரமணியன், கொத்தமங்கலத்தில் நிலைபெற்று வாழ்ந்தமையால் கொத்தமங்கலம் சுப்பு என்றே அழைக்கப்பட்டார். இளம்வயதில் ஒரு மரக்கிடங்கில் கணக்காளராக வாழ்க்கையைத் தொடங்கியவர், பின்னாளில் கவிஞர், பத்திரிக்கையாளர், துணைஆசிரியர், நாடகநடிகர், எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்ட அறிஞராக அறியப்பட்டார். கலைமணி என்கிற புனைப்பெயரில் எழுதிவந்தார். மண்ணின் வாசனை மிளிர பாடல்கள் எழுதுவது இவரின் தனிச்சிறப்பு. இக்காரணத்தால் இவரை மண்ணாங்கட்டிக் கவிஞர் என்பாரும் உண்டு. ஒரு காட்டாக இந்த கவிதையைப் பாருங்கள்.
மாரியாத்தா பேரைச்சொல்லி-அவ . . வாசலிலே பொங்கல் வைச்சா மாரியாத்தான் பால்சொரியும்-ஊரில் . . மந்தைப்பசுக் கூட்டமெல்லாம்.
ஊருகூடி வாழவேணும்-எங்க . . உள்ளம் தங்கமாக வேணும் ஏருபிடிச்சு உளுதநிலம்-பொன்னாய் . . எந்தநாளும் விளையவேணும்
தமிழ் மண்ணிலே பிறந்தேன். தமிழ் மக்கள் இடையே வளர்ந்தேன். தமிழை மட்டுமேதான் பயின்றேன். படிப்பின் பலத்தைக் கொண்டு எழுதினேன். அவை இன்று புத்தகமாக வெளிவருகிறது. இந்தப் பெருமை எனக்குக் கிடைக்கக் காரணமாகிய தமிழ்நாட்டுக்கும் தமிழகத்தின் உயரிய மக்களாகிய விவசாயிகளுக்கும் எனது நமஸ்காரம் என்று பணிவுடன் சொன்னவர் சுப்பு.
அவர் மனித நேயப் பண்பாளர். மனத்தாலும் மற்றோருக்கு இடர் நினையாத காந்தீயவாதி என்று கவிஞர் வாலி இவரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இவர் படைப்புகள் ஏராளம். தில்லானா மோகனாம்பாள், பந்தநல்லூர் பாமா, பொன்னிவனத்துப் பூங்குயில், ராவ்பஹதூர் சிங்காரம் முதலிய புதினங்கள்; 150 சிறுகதைகள், மஞ்சுவிரட்டு என்னும் கவிதைத் தொகுப்பு, 100க்கு மேற்பட்ட நாடகங்கள். கல்கி, ஆ.விகடன் வாசன், ம.பொ.சி, ரா.பி. சேதுப்பிள்ளை போன்ற பெரியோர்களின் பாராட்டைப் பெற்றவர். 1971-ல் ஜனாதிபதியிடம் பத்மஸ்ரீ விருது பெற்றவர். வில்லுப்பாட்டில் தனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டு காந்திமகான் கதையை நாடறிய வைத்தவர்.
தில்லானா மோகனாம்பாள் தொடர்கதையாக வந்த நாட்களில் 'கலைமணி' என்கிற புனைப்பெயரில் அதை எழுதி வருபவர் யார் என்பது ஒரு இரகசியமாகக் காக்கப்பட்டு வந்தது. இந்த இரகசியம் ஒருநாள் வெளிவந்தது பற்றிய சுவையான செய்தியும், மேலும்
மன்னவ னானாலும் – மாடோட்டும் . . சின்னவ னானாலும் மண்ணில் பிறந்தாரே – முடிவில் . . மண்ணுக் கிரைதானே
இந்தப்பாடல் ரத்தக்கண்ணீர் படத்தில் வருகிறது. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய இப்பாடல் திரு. சுப்புவின் பெயர் குறிப்பிடப் படாமல் வருகிறது.
வாலி கேட்கிறார்... “அண்ணா.. ரத்தக் கண்ணீர் படத்துல உங்க பாட்டு வரிகள் வருது. ஆனா பாடலாசிரியர்கள் பெயரிலே உங்க பெயரில்லை. பெருமை வேறு யாருக்கோ போகிறதே?”
கொத்தமங்கலம் சுப்பு சொன்னார்:
“டேய்.. நாம எழுதின ஒரு பாட்ட, இன்னொருவன் தன் பாட்டுன்னு சொல்லிக்கறான்னா நீ சந்தோஷப்படணும். ஏன்னா, அடுத்தவன் தன்னுதுன்னு சொல்லிக் கொள்ள ஆசைப்படற மாதிரி – அற்புதமான பாட்டை எழுதியிருக்கேன்னு அர்த்தம். நீ மோசமான பாட்டா எழுதியிருந்தா, மத்தவன் அதத் தன்னுடையதுன்னு சொல்லிக்க மாட்டானே!”
என்பது போன்ற சுவையான செய்திகளும் இங்கு குறிப்பிடத்தக்கன.
தோடி கோடி பெறும் என்று பெயர் வாங்கிய திரு. ராஜரத்தினம் பிள்ளையின் சீவாளி நாதத்தில் மனதைப் பறிகொடுத்து அவர் பற்றி எழுதிய பாடலொன்றிலிருந்து சில வரிகள்:
ராகமாலிகைக்கு நானும் மயங்கி போகல்லே-உங்க . . வேகமான ரவைகளுக்கும் வசமும் ஆகல்லே பாகும் தேனும் கற்கண்டும் போல்பாய்ந்த நாதமும் . . பயித்தியமாய் ஆக்கவில்லே பாருங்கோ உங்க
சீவாளி சத்தத்துக்கே மயங்கிப் போயிட்டேன்-என் . . சிந்தையை இழந்து உங்கவசத்தில் ஆயிட்டேன் பூவாலே மாலையிட்டா போதாதென்னுதான்-தமிழ்ப் . . பாவாலே மாலையிட்டுப் பணிகிறேனையா
கொ.சுப்புவைப் பற்றி யாரேனும் கவிதை பாடியுள்ளனரா என்று கேட்டால், இதோ புதுவயல் செல்லப்பன் இருக்கிறார். அவர் சொல்வதை இரத்தினச் சுருக்கமாக ஒரே வரியில்,
மதுக்குடத்தைச் சாய்ச்சாபோலே . . சொல்விரிச்சானாம்
என்று கூறி தனது உரைக்கு முத்தாய்ப்பு வைத்தார் பேரா. பசுபதி
திருமதி அலமேலு மணி:
ஆறடிக்கு மேலான ஆக்ருதி, சந்தனப் பொட்டுடன் ஜவ்வாதும் சேர்ந்து மணக்க ரேக்ளா வண்டியில் சவாரி. பகல் முழுதும் வேலை செய்த களைப்பிருந்தாலும் மாலையில் உற்சாகமாக நாடகம் பார்க்க 20 மைல் பாடிக்கொண்டே செல்வார் என்றால் அவருக்கு நாடகக் கலையில் இருந்த ஈடுபாடு வெள்ளிடை மலை.
செல்லப்ப செட்டியாரின் மரக்கடையில் கணக்கராக பணிபுரிந்த சமயம் பர்மா தேக்கு, பெல்ஜியம் கண்ணாடி முதலிய சரக்குகளின் அருமை பெருமைகளை தனது பேச்சுத் திறத்தால் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் சொல்லி வியாபாரத்தைப் பெருக்கும் ஒரு 'ஸேல்ஸ்மேனாகவும்', சிரித்துப் பேசியே கடை பாக்கிகளை வசூல் செய்யும் திறனும் கொண்ட 'மானேஜராகவும்' தனக்கு ஒரு மரியாதையும், முதலாளியின் நம்பிக்கையையும் பெற்று விளங்கினார்.
நாடகம் பார்க்கச் செல்லும்போதெல்லாம் வத்திராயிருப்பு ஸ்ரீனிவாசன் என்பவருடன் எற்பட்ட நட்பில் ஜெமினி ஸ்டூடியோவில் பணியில் அமர்ந்தார். படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி, திரு.வாசன் அவர்களின் வலக்கை எனவும், ஜெமினி நிறுவனத்தின் தூண் எனவும் பிறர் போற்றும்படி உயர்ந்த நிலையை அடைந்தார். ஜெமினியில் இருந்த நாட்களில் பல திரைப்படங்களில் பாடல்கள் எழுதியும், நடித்தும், வசனங்கள் எழுதியும் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்தார்.
மகாத்மா காந்தியிடம் மிக ஈடுபாடு கொண்டு ஒருநல்ல காந்தீயவாதியாகத் திகழ்ந்தார். நாடக, இசைக் குழுவுடன் பயணிக்கும் போதெல்லாம் புகைவண்டிப் பிரயாணங்களில் மூன்றாம் வகுப்பிலே பயணிப்பதும், எப்போதும் கதராடை அணிவதும் இவருக்குப் பிடித்தமானவை. சாதி சமயங்களில் வேறுபாடு பார்க்காமல் எல்லா மனிதர்களையும் சமமாகப் பாவித்த ஒரு நல்ல மனித நேயப் பண்பாளர். வில்லுப்பாட்டில் காந்திமகான் சரிதத்தை உலகிற்கு அளித்தமை இவரது பெரிய சாதனைகளில் ஒன்று. முந்தைய யுகங்களில் வில்லுக்கு இராமனும், விஜயனும் எப்படியோ அவ்வாறே இந்த யுகத்தில் வில்லென்றால் சுப்பு என்று கூறுமளவிற்கு வில்லுப்பாட்டைப் பிரலபமாக்கிய பெருமை இவரையே சாரும். முதன் முதலில் இவர் ஒரு வில்லைத் தயார் செய்தது ஒரு சுவாரசியமான கதை. வில்லே இல்லாமல் வில்லுப்பாட்டு சிறப்புடையதன்று என்பதால், முதன்முதலில் வில் ஒன்றினை வடிவமைக்க இவர் சென்னை 'மூர்மார்க்கெட்' சென்று, அங்கிருந்த 'சைக்கிள்' கடைக்காரரிடம் கிடைத்த பொருட்களைக் கொண்டு (அதாவது, எஃகுக் கம்பிகள், மணிகள் முதலியவை) இவரே ஒரு வில்லினை இசையின் ஒலியமைப்புகள் சிறக்கும்படி வடிவமைத்தார்.
ராதா சில்க் எம்போரியம் பற்றி அறிந்திராத தமிழர்களே இருக்கமுடியாது. இந்த நிறுவனத்தைப் பற்றிய ஒரு நிகழ்வில் சுப்புவின் ஆசுகவித் திறமை புலப்படும் செய்தி ஒன்றினை இங்கே கூறுவோம். ராசி பட்டுப் புடவைகள் என்பன இந்த நிறுவனத்தின் முதல் இரண்டு எழுத்துக்களின் குறுகிய வடிவம் என்றே அறிந்திருந்த என்போன்றோருக்கு இது ஒரு புதிய செய்திதான்! ஒருமுறை ராதா சில்க் கடைக்காரரான திரு, கல்யாணராமனுக்கு ஒரு பாடல் சொல்லுங்கள் என்று தியாகராஜ பாகவதர் கேட்டுக்கொள்ள, உடனே ஆசுகவி சுப்பு அவர்கள்,
ராதா சில்க்கின் ராசி . . உன்னத வாழ்வுக்கு ஆசி
என்று சொல்லவும், அந்த கடைக்காரர் இதில் வந்த ராசி என்பதையே நிறுவனத்தின் இலக்குமொழி (motto) யாக ஏற்றுக்கொண்டு விட்டாராம்.
திரையுலகின் பெரும்புள்ளிகள் எனப்படும் திரு.ராமானந்த சாகர், திலீப் குமார், வைஜயந்திமாலா, ராஜ்குமார் போன்றோருடன் நெருங்கிய பழக்கமும் குடும்பத்தில் இருப்போர் அனைவருக்கும் இவர்களுடன் பழகும் வாய்ப்பும் கிட்டியமை குறித்து திருமதி மணி அவர்கள் சிலாகித்துச் சொன்னார்கள். மேலும் இந்திய ஜனாதிபதிகள் மூவருடன் (திரு. வெங்கடராமன், லால் பகதூர் சாஸ்திரி, ராதாகிருஷ்ணன்) நேரில் சந்தித்து உரையடிய நிகழ்வுகளும் பெருமை சேர்ப்பன.
இரண்டாவது உலகப்போர், மற்றும் சீனபோர் முடிந்து தாயகம் திரும்பும் வீரர்களை வரவேற்கும் வகையாக இவர் எழுதிய பாடல்கள் பிரலபமானவை.
பொறந்த நாட்டை நினைச்சுப் பார்த்துப் புறப்பட்டு வாங்க எக்களிக்கும் கடலுமேலே ஏறிப் போனீங்க முக்குளிக்கும் கப்பலுள்ளே மொடங்கிப் போனீங்க மாராழத்திலே பள்ளம் வெட்டி மறைஞ்சி ருந்தீங்க பாராங் கல்லுலே நெஞ்சுறுத்தப் படுத்திருந்தீங்க நின்னு நின்னு கால்கடுத்து நினைப் பழிஞ்சீங்க நீட்டி நிமிர்ந்து படுத்துக்கலாம் வீட்டுக்கு வாங்க
சீனப்போர் நடந்து கொண்டிருந்த நாட்களில் நிதி சேகரிக்க பெண்களிடம் உள்ள நகை முதலான உயர் மதிப்புள்ள பொருட்களை நன்கொடையாக அரசு பெற்றுக் கொண்டிருந்தது. அவ்வமயம் தந்தையாரிடம் கலந்து பேசி அவரது அனுமதி பெறாமலேயே தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியும், இரு கைவளையல்களையும் கழற்றித் தந்துவிட்டார் அலமேலு. பின்னர் வீட்டிற்கு வந்ததும் மெதுவாக தந்தையிடம் இன்று இவ்வாறு செய்துவிட்டேன் என்று அழாக்குறையாக நடந்த நிகழ்வினைச் சொல்ல, அதைக்கேட்டஅவர், :'ஆத்தாக்குட்டி, நீ ஏன் கைவிரல் மோதிரத்தைக் கொடுக்க மறந்துவிட்டாய்?' என்று கேட்டது மிகவும் மனதை நெகிழவைக்கும் நிகழ்ச்சியாகும் என்று கூறி தன் தந்தையை நினைவு கூர்ந்து கண்ணீர் தளும்ப உணர்ச்சி வசமானார் திருமதி மணி. அவர் கண்களில் மட்டுமன்று. அவையோர் அனைவரின் கண்களிலும் நீர்ப்பெருக்கு.
(தொடரும்)
மாகா தமிழ்ச் சங்கம் நவம்பர் 21, 2009 நிகழ்ச்சித் தொகுப்பு: சௌந்தர்
பாகம்-2
கதைமணி-சுஜாதா (ரங்கராஜன்)
திரு. ரகுராமன்-ரசிகர்/உறவினர் என்ற கோணத்தில்
S.ரங்கராஜன் பிறந்தது சென்னைத் திருவல்லிக்கேணியில். பிறந்த தினமே ஒரு சுவாரசியமான தினம். மே 3, 1935. அதாவது 3.5.35 நினைவில் கொள்ள எளிதான எண்கள். அப்பா சீனிவாச ராகவன் மின்சாரவாரியம் வாரியமாவதற்கு முன்னால் இருந்து வேலை செய்து கொண்டிருந்தார். ரங்கராஜனின் அண்ணன் திரு கிருஷ்ணமாச்சாரி ஒரு டாக்டர், தம்பி ராஜகோபாலன் தொலைபேசி இலாகாவில் இன்ஜினியர். திரு ரகுராமனுக்குத் தந்தை வழியில் ஒன்றுவிட்ட சகோதரர் என்று சொல்லும்படியான உறவு. வேனிற்கால விடுமுறையிலும் மற்றைய குடும்ப நிகழ்ச்சிகளிலும் நிறைய சந்திக்கும் வாய்ப்பு இருந்து கொண்டே இருந்தது இவருக்கு. ரங்கராஜன் இளமைப் பருவத்தில் சித்திரம் வரையும் திறமை பெற்றிருந்தார்(water color painting); மேலும் புல்புல்தாரா என்கிற இசைக்கருவியும் நன்கு வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்தார்.
பிறந்தது சென்னையில் என்றாலும் வளர்ந்தது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். தாத்தா குவளக்குடி சிங்கமையங்கார். ஸ்ரீரங்கத்தில் The Boys High school என்னும் ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் படிப்பு. பின்னர் புனித சூசையப்பர் கல்லூரியில் படிப்பு. இந்தியாவின் பின்னாள் குடியரசுத் தலைவாராய் விளங்கிய திரு. அப்துல் கலாம் உடன் படித்த மாணவ்ர். கல்லூரிக்குப் பின்னர், சென்னை குரோம்பேட்டையிலுள்ள MITல்(Madras Institute of Technology), சேர்ந்து எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்தார். அப்போதும் அவரின் பாட்ச்சில் படித்தவர் அப்துல் கலாம். கலாம் அப்போது ஏரொனாட்டிக்ஸ் படித்துக் கொண்டிருந்தார்.
டெல்லியில் பதினான்கு வருடங்கள் கழித்து, 1970ல் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ்[BEL] நிறுவனத்தில் டெபுடி மானேஜராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின் முப்பது வருடங்கள் பெங்களூர் வாசம் தான். பிறகு சிறிது வருடங்களில் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்டு பிரிவில் ஜிஎம் பதவிக்கு உயர்ந்த போது, கடுமையான வேலைகள் காத்துக் கொண்டிருந்தன. Electronic Voting Machine(EVM) என்று இன்றுள்ள வாக்கெடுப்பு இயந்திரத்தை தயாரித்த BELலின் R &D பிரிவின் சீப் ஆக பணியாற்றினார். இந்த வாக்கெடுப்பு மிஷின் தான் இந்தியாவெங்கும் பயன்படுத்தப் படுகிறது.
இங்குதான் மீண்டும் தன் நண்பர் கலாமுடன் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. இருவரும் ஏவுகணை ப்ரோக்கிராமிங் செய்தார்கள். கலாமைப் பற்றி தனது நினைவுகளை பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் சுஜாதா. இதே நேரத்தில், எழுத்துலகில் ராக் ஸ்டார் அளவிற்கு புகழ் பெற்றார். ஒரே நேரத்தில் ஐந்து புத்தகங்களில் ஆறு தொடர்கதைகளெல்லாம் எழுதினார். கதை, கட்டுரை, நாடகம், ஊடகம் என்று தனது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டு எழுதினார். இவரின் கதைகள் நன்றாக இருந்தாலும் அவைகளை சினிமா படமெடுத்தவர்கள் மாற்றியதால் தோல்வியைத் தழுவின. பாலசந்தருக்கு நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு முதன் முதலில் வசனமெழுதினார்.
1993ல் பிஇஎல்லிலிருந்து ரிடையரான போது முடிவெடுக்கப் பட வேண்டிய விஷயம் ஒன்றிருந்தது. ரிடையர்மெண்டுக்கு பிறகு எங்கு செல்வது? சென்னை செல்ல வேண்டாம், குடிநீர்ப் பிரச்சனை என்று சொன்ன நண்பர்களை தட்டிக் கொடுத்து சென்னையில் ஆழ்வார்ப்பேட்டையில் குடியேறினார்.
இதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்னர் தான் மணிரத்னத்தின் ரோஜா படத்திற்கு வசனமெழுதினார். அந்தப் படம் தமிழ் சினிமாவை நிறையவே மாற்றிப் போட்டது. சென்னைக்கு வந்த பின், கமல் சொல்லி ஷங்கரின் படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்தார். சிவாஜி புத்தகத்தில் வந்த சிறுகதை தொடங்கி இன்று ரஜினியின் சிவாஜிப் படத்திற்கு வசனம் வரை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலம் எழுத்துலகில் இருந்து வந்திருக்கிறார். இன்று வரை 100 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 15 நாடகங்களும், ஏராளமான விஞ்ஞான மற்றும் இதர கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். நண்பர்களுக்காக அவ்வப்போது சினிமாப் பட வசனம் எழுதுகிறார்.
குமுதத்தில் ஏற்கெனவே ஒரு (ரா.கி) ரங்கராஜன் இருந்ததால் ”நீங்க வேற ஏதாவது பேர் வச்சுக்கங்களேன்!…” என்று சிலர் சொல்ல, ரங்கராஜன், சுஜாதா என்கிற தன் மனைவி பேரில் எழுத ஆரம்பித்தார். தமிழ் இலக்கிய உலகம் தலையை சிலுப்பி கொண்டு எழுந்தது. ரங்கராஜன் காணாமல் போய் சுஜாதா என்கிற மூன்றெழுத்து பிரபலமாக ஆரம்பித்தது.
திரு ரகுராமன் தனக்கு ஏற்பட்ட சில சம்பவங்களை இன்றைய பேச்சில் எடுத்தியம்பினார்.
1) நடந்த வருடம்1978. நாகூர், வேளாங்கண்ணி என்ற ஊர்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு அழைத்துச் செல்லும் போது எதையும் கூர்ந்து கவனித்து நினைவில் கொள்ளும் ஆற்றலை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்த ஒரு சம்பவம் இது. ரகுராமன் சொல்கிறார்: "கோவிலைப் பார்த்தோம், குளத்தைப் பார்த்தோம்; வீதியில் சென்றோம்; வேடிக்கையும் பார்த்தோம்; ஆனால் இருவர் பார்வையில் கவனம் வேறுவேறு விதம்; தேவாலயம் அருகே 'வானவர் போற்றும் தேவதை' என்று பளிச்சென்று எழுதிய பலகையினைக் கண்டோம். இப்படி ஒரு பலகையினைக் கண்டது எனது நினைவில் ஒருசில மணித்துளிகளே; பின்னர் நினவுக்கே வரவில்லை; ஆனால் சுஜாதாவிற்கு அப்படியில்லை; அவர் எழுத்தில் ஓர்நாள் பளிச்சென்று மீண்டும் இவ்வரிகள்; நான் அவரது திறமையைக் கண்டு அசந்துவிட்டேன்"
2)சுஜாதாவின் தாய் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் சென்னை மருத்துவமனையில் இருந்தார். அவரைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அங்கே மருத்துவராக இருந்த திரு.ரகுராமனுக்கு இருந்தது. அவ்வமயம் சுஜாதா, அவரது தம்பியுடன் ரகுராமனுக்கு நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு மருத்துவமனையிலிருந்து நடந்து சென்று அளவளாவிய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். தாயின் உடல்நிலையில் மாற்றம் ஏதும் இல்லாத நிலையில் பங்களூருக்குப் பயணமான அன்றிரவே, தாயின் உயிர் பிரிந்தது. அவருக்குச் செய்தி அனுப்பி அவர் மீண்டும் சென்னை வருவதற்குள், தாயின் அந்திமக் கடன்களை நடத்தும்படி அவரது தந்தை விருப்பப்பட, அதையறிந்த சுஜாதா தமது தந்தையிடம் மிகவும் கோபமடைந்து பேசிவிட்டாராம். இவ்வளவு கோபம் இவருக்கும் வருமா என்று நினைத்துக்கூடப் பார்க்க இயலாது என்று நினைவு கூர்ந்தார் திரு ரகுராமன். இதைத் தொடர்ந்து வந்த ஒரு கதைதான்-ஒருகொலை, ஒருபிரயாணம்
3)சுஜாதாவிற்குப் பொதுவாக மருத்துவர்கள் செய்யும் சோதனைகளும் அவர்கள் வைத்திருக்கும் உபகரணங்களையும் கண்டாலே ,'டாக்டர்கள் செய்யும்ஒரு ஹைடெக் சதி' என்பாராம்.
சுஜாதா எழுதிய நூல்களின் மற்றும் வாழ்க்கைக்குறிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவில் http://ta.wikipedia.org/wiki/ காணலாம்.
திரு.வெங்கடரமணன்: விமர்சகர்/நண்பர் என்ற கண்ணோட்டத்தில்
ஐந்து தலைமுறைகளுக்குக் குறைவில்லாமல் தமிழகத்து இளைஞர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்களுள் சுஜாதா முக்கியமானதொன்றாக இருக்கும். அவருக்கு முன்பும் பின்பும் அவ்வளவு அபாரத் திறமையுடன் மொழியைக் கையாண்டவர்கள் தமிழில் மிகக் குறைவானவர்களே. இன்றைய எழுத்தாளர்களில் தொண்ணூறு சதவீதத்தினரின் எழுத்துக்களில் இரண்டு பக்கங்களுள் ஒரு தடவையாவது சுஜாதா- வைக் காணமுடியும். கணையாழியின் கடைசி பக்கத்தில் அவர் தொடர்ந்து எழுதி வந்தது இன்றைய ப்ளாக் (blog) என்னும் அமைப்பின் முன்னோடி என்று சொல்லலாம். சுஜாதாவின் ரசிகனாக ஆனது இதனால்தான் என்று வெங்கட் சொல்கிறார்.
கற்றதும் பெற்றதும் என்ற தொடரில் கேள்வி-பதிலாக அமைந்த தொடர் அரசு பதில்கள், தமிழ்வாணன் பதில்கள் போலல்லாமல் அசட்டு நிலையிலிருந்து மேல்மட்டத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை இவரையே சாரும். வயதானால் ஏற்படும் உடல்/மன/குண மாற்றங்களை தனது அசத்தலான பாணியில் நகைச்சுவையாக ஒருமுறை இத்தொடரில் அவர் எழுதியிருக்கிறார். அவர் உடலுக்கு தான் வயதே ஒழிய மனம் என்றும் இளமையாக இருந்ததாகவே தோன்றுகிறது.பெரும்பாலும் துணுக்குத் தோரணங்களாகவே அமைந்திருக்கும் தமிழ் நாடகத்தின் பாணியை மாற்றியமைத்த பெருமைக்கும் இவரே காரணம்.
தனது பள்ளிப் பருவங்களை நினைவு கூர்ந்து சொல்லுமிவர் இவ்வாறு பேசினர்: சக தோழர்களில் சிலர் தங்களைக் கமலஹாசனாகவும் ரஜினிகாந்த் ஆகவும் உருவகித்துக் கொண்டு ஸ்டெப் கட்டிங், சாக்பீஸைத் தூக்கிப்போட்டு வாயால் பிடித்தல் என்று தங்களுக்கான பிம்பங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அதே சமயத்தில் எனக்காக நான் வரித்துக் கொண்ட தோற்றம் வஸந்த். அது “மோபெட்டில் ஏறி ஆக்ஸ்லரேட்ட எட்டு நொடிக்குள் அறுபது” என்று செயலில் துரிதம் காட்டுவதிலும், அடுத்தத் தெரு உ ஷாவிடம் அபத்த ஜோக் சொல்லவும், மதியம் தூங்கி எழுந்தவுடன் பேச்சு குளறும் பாட்டிக்கு வந்திருப்பது மயஸ்தேனியா க்ராவிஸ் என்று வாயில் நுழையாத பெயரைச் சொல்லி மாமாவைப் பயமுறுத்தவும், நீண்ட நேரமாக கட்டைப் போட்டு ஓவர்களை வீணடிக்கும் பீக்காசுவை ‘ஹேபியஸ் கார்பஸில்’ வெளியே அழைக்கிறேன் என்று எதிர் காப்டனிடம் சொல்லவும், செஸ்ஸில் தோற்றுப் போன வக்கீல் மாமாவிடம் ரை லோபெஸ் ஒப்பனிங்க்கு நைட்டை வெட்டுக்கொடுத்ததுதான் உங்கள் தோல்விக்குக் காரணம் என்று அவர் முகத்தில் பேஸ்த் அடிக்கச் சொல்லிவிட்டு நகர்வதற்கும் இன்னும் இத்யாதி மூளை, ஆண்மை, இளமை சமாச்சாரங்களுக்கும் நம்மிடம் இருக்கும் வஸந்த்-தனம்தான் காரணம் என்ற பதின்மக் கதாநாயகக் கனவுகளுக்குப் பேருதவியாக இருந்தது.
வானொலி மாமா சோதனைகள் என்று குழந்தைத்தனமாகவும், பொழுதுபோக்கு பௌதீகம் என்று வறட்சியாகவும் வாசித்துக் கொண்டிருந்த தமிழில் சிலிக்கன் சில்லுப் புரட்சியைக் கொண்டு வந்தவர் சுஜாதா. ஸ்பான், ஸ்பூட்னிக், கூரியர், சயண்டிபிக் அமெரிக்கன், நே ஷனல் ஜியாகரபிக் சமாச்சாரங்களை ‘சுடச்சுட” அந்தக் காலங்களில் தமிழுக்குக் கொண்டுவந்தவர். என்னுடைய வாழ்க்கையின் போக்கை மாற்றியமைத்ததில் அவருக்கும் கொஞ்சம் பங்குண்டு. நான் பத்தாம் வகுப்பு முடித்து +2 செல்லும்பொழுது மிகச் சூடாக இருந்தது “காமெர்ஸ் க்ரூப்” படிப்பு (எக்கனாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்ஸி, கணக்கு) என்னுடன் படித்த சகாக்கள் எல்லோரும் சிஏ-ஆவதைக் கனவாகக் கொண்டு வர்த்தகப்படிப்பில் நுழைந்த பொழுது இயல்பியலிலும், பொறியியலிலும் சுஜாதா (யா.பெர்ல்மான், ரைட்னிக், ஈறாக) கட்டுரைகள் என்னை வர்த்தக வழிசெல்லாமல் தடுத்தாட்கொண்டு அறிவியலுக்கு வரவழைத்தது. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் கணினி வருகிறது என்று சுஜாதா எழுதும்பொழுதுதான் காகிதங்கள் வாயிலாக மாத்திரமே அறிந்திருந்த ஒன்றிலிருந்து நாம் நீண்ட காலம் தப்பமுடியாது எனவே இதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று படிக்கும் ஆர்வம் வந்தது.
பெங்களூர் ஐஐஎஸ்ஸியில் பல தமிழ் மன்ற ஆண்டு விழாக்களுக்கு சுஜாதாதான் ஆஸ்தான தலைவர். ஐஐஎஸ்ஸியில் படிக்கும்பொழுது சிலமுறைகள் அவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புகளில் அவரது கூர்மையான அவதானிப்பை நேரடியாக அறியமுடிந்தது. முதல் தடவை ஒரு சாவகாசமான சனிக்கிழமை காலை, இரண்டு மணி நேர இலக்கில்லா அரட்டைக்கு இடையில் மழைவிட்டிருந்த பொழுது காப்பி குடிக்கச் சென்றோம். ஓய்ந்த மழைக்குப்பின் ஐஐஎஸ்ஸின் சாலைகள் கழுவிவிடப்பட்டதுபோல் கருப்பாக, பளபளப்பாக மிகக் கவர்சியாக. சாலையின் இரு ஓரங்களிலும் கரையிட்டதுபோல் மஞ்சள் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. அந்தப் பூக்களைப் பற்றிய பேச்சு வந்தது. இது என்ன பூ என்றார். அவர் அறிந்திருக்கவில்லை. என் நண்பர் ஒருவர் இண்டியன் லேபர்னம் என்று சொன்னார். இந்தச் சந்திப்புக்கு அடுத்த இரண்டு வாரத்தில் கல்கியில் ஒரு புதிய தொடரை (பெங்களூரில் ஓரிரவில்) ஆரம்பித்தார். அந்த கதைதான் ”வானம் வசப்படும்” என்று சினிமாவாக வந்தது. அந்தக் கதையே இப்படித்தஅன் தொடங்கும் “இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால் இன்னதேதியில் சொல்லிவைத்தாற் போல் பெங்களூர் சாலையோரமெங்கும் இண்டியன் லேபர்னம் என்னும் மஞ்சள் பூக்கள் பூக்கட்டும்” எங்களுக்கும் சுஜாதாவுக்கும் நடந்த அதே இண்டியன் லேபர்னம் உரையாடல் எந்த மாற்றமுமில்லாமல் அந்த ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையில் கதையில் நடந்தது.
இரண்டாம் முறை இன்னும் சுவாரசியமானது. அப்பொழுது விகடனில் ‘நிலா நிழல்’ ‘என் இனிய இயந்திரா’, 'இருள் வரும் நேரம்' தொடர் மிகப் பிரபலமாக நடந்துகொண்டிருந்தது. அதில் ஸ்டார் வார்ஸைப்போல லேசர் ஆயுதமெல்லாம் வரும். ஒரு இடத்தில் லேசர் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தப்படும்பொழுத்து ஜீனோ என்ற இயந்திர நாய் நிதானமாக உன்னிடம் இருக்கும் லேசரின் பவர் அதன் கொகரென்ஸில் இருக்கிறது, நான் அதைப் போக்கி உன் துப்பாக்கியை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவேன் என்று சொல்லும். அந்த சந்திப்பின் பொழுது எங்கள் ஆய்வகத்திலிருந்த லேசர்களை அவருக்கு இயக்கிக் காட்டிக்கொண்டிருந்தோம். (அந்தத் தொடருக்காகவே எங்கள் லாப்-க்கு வந்தாரோ என்று தோன்றுகிறது). அப்பொழுது coherence என்பது லேசரின் அடிப்படைப் பண்பு என்றும் அதை அவ்வளவு எளிதில் மாற்றமுடியாது என்றும் அவரிடம் சொன்னோம். தொடர்ந்து அப்பொழுது இந்திய இராணுவ ஆராய்ச்சி நிறுவனத்திற்காக நான் செய்துகொண்டிருந்த Optical Phase Conjugation என்ற சோதனையை அவருக்கு விவரித்தேன். அதன் முக்கியமான இலக்கு ஒரு auto-tracking ஆடி போன்ற அமைப்பை உருவாக்குவது. இது ரொனால்ட் ரீகனின் ஸ்டார் வார்ஸ் ப்ரொக்ராம்க்குப் (Strategic Defense Initiative) பதில் சொல்ல வேண்டி இந்தியாவின் முயற்சிகளில் ஒன்று. வானில் பறக்கும் விமானத்திலிருந்து ஏவப்படும் லேசரை அதனிடமே திருப்பியனுப்பும் உத்தி என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.
அடுத்த வாரம் கதையில் ஜீனோவின் decoherence எல்லாம் பம்மாத்து சும்மா சுடு என்று சக காவலனிடம் ஒருவன் சொல்ல, அவன் சுட ஜீனோ phase conjugate mirror ஐப் பயன்படுத்தி அவனிடமே லேசரைத் திருப்பியனுப்பி அழிக்கும். நான் பழகிய மனிதர்களில் இத்தனைக் கூர்மையான அவதானம் கொண்டவர்கள், அந்த அவதானத்தை சுவரசியாமான உரைநடையாக்கம் செய்யும் திறன் கொண்டவர்கள் மிகச் சிலரே.
சுஜாதாவின் முதல் திரைப்பிரவேசம் அவ்வளவு வெற்றிகரமாக இல்லை. கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, நினைத்தாலே இனிக்கும் என்று தொடர்ச்சியாக அவர் கதைகள் திரைச்சேதம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இரண்டாம் வருகையில் அவருக்கு மாபெரும் வெற்றி ரோஜா, முதல்வன், இந்தியன், அந்நியன், ஆய்த எழுத்து, சிவாஜி என்று அவர் பங்களித்த படங்களில் பல மாபெரும் வெற்றியைப் பெற்றவை. எழுத்துக்கும் திரைக்கும் இடையில் சப்தமில்லாமல் சில நாடகங்களுக்கும் கதை, வசனம் எழுதினார். பூர்ணம் விஸ்வநாதன் உதவியுடன் அபத்தத் துணுக்குத் தோரணங்களிடமிருந்து மேடை நாடகங்களை மீட்டெடுக்கும் முயற்சி பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும்கூட என்னைப் பொருத்தவரை அவர் ஆத்மார்த்தமாகச் செய்த ஒரே காரியம் இதுவாகத்தானிருக்கும் என்று தோன்றுகிறது.
பலரும் எழுத்துத் துறையில் சுஜாதா அசத்திய சாதனைகளைச் செய்து முடித்துவிட்டதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை அவர் எழுதுபதுகளில் கட்டியம் கூறிய வருகை நிறைவேறவேயில்லை என்றுதான் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் வர்த்தக ரீதியான அவரது அசாத்திய சாதனைகள். அலுங்காமல் போகிற போக்கில் எழுதுபவை பெருவெற்றியைப் பெறுவதும் ஒன்றிரண்டு உண்மை முயற்சிகள் தோல்வியைத் தருவதும் அவரது எழுத்தின் போக்கை முழுமையாக நிர்ணயித்துவிட்டன. அதன் காரணமாகவே அவர் எந்த ஆழமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. எல்லாவற்றிலும் தகவல் தெரிய ஒரு சுஜாதா போதும் ஆனால் எவற்றிலும் முழுமையான புரிதலை அவர் தந்ததில்லை. பெயர் உதிர்த்தல், ஜல்லியடி போன்று அவர் பிரபலமாக்கிய சில வார்த்தைகள் அவருக்கே முழுமையாகப் பொருந்திப்போவது வருத்தமான விஷயம்.
வேலைக்கிடையில் எந்தவிதமான ஆழமான முயற்சிகளுக்கும் இடமில்லாத நிலையில் பெங்களூரில் இருந்தவரை அவரால் அதுதான் சாத்தியம் என்று தோன்றியது. ஓய்வுக்குப் பின் அவர் மாபெரும் படைப்புகளை உருவாக்கப் போகிறார் என்றிருந்தது. வைணவம், அறிவியல், புதினம், சிறுகதை என்று ஆர்வமுள்ள துறைகளில் முத்திரை பதிக்கும் படைப்புகளை அறுபது வயதுக்குப் பின் படைக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சென்னைப் பிரவேசத்திற்குப் பின் குமுதம், மணி ரத்னம், ஷங்கர் என்று வர்த்தகம் அவரை முழுமையாக விழுங்கிவிட்டது.
சீரங்கத்து தேவதைகளை எத்தனை முறைபடித்தாலும் அலுக்காது ஒவ்வொருமுறை சீரங்கத்து வீதிகளில் சுஜாதாவின் எழுத்துக்களில் வந்த மனிதர்கள் உலாவுவதாகவே சில வாசகர்களுக்குத் தோன்றுவது உண்டு. அந்த எழுத்துக்கான மொழி,’பீகாரில் வெள்ளம்’ என்ற ரீதியிலான அக்கால நியூஸ் ரீல் போல சவ சவ என்றிருந்திருக்க வேண்டிய வேளையில்,கத்தி வீச்சுப் போல கூர்மையையும் ஒளியையும் பெற்றிருந்தது. அதில்தான் அவர் வென்றார்.
தீபாவளி மலர் என்பது கல்கி, அமுதசுரபி தொடங்கி நரசிம்மப்ரியா வரை வரத்தொடங்கிவிட்டன. அனைத்தும் மாறுதலற்ற ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பத்தைக் கிண்டல் செய்யும் வகையில் எழுதிய ஹாஸ்ய வர்ணனை ஒன்றினையும் அவையோருக்குப் படித்துக் காண்பித்தார். அனைத்து அவையோர் முகத்திலும் சிரிப்பு கலந்த நிதர்சனம்.
[அரங்கத்தில் கொ.சுப்பு அவர்களின் படைப்புகள் சில அவையோர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவரது வாழ்க்கையில் நடந்த சில முக்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், குறிப்பாக குடியரசுத் தலைவரிடம் விருது பெற்ற நிகழ்ச்சி முதலியன. சுஜாதாவுடன் ரகுராமன் இருக்கும் சில புகைப்படங்களும், கமலஹாஸனுடன் இருக்கும் புகைப்படங்களும் அரங்கை அணிசெய்திருந்தன.]
(நிறைவு
|